சென்னை: ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் தமிழ் துறை விரைவில் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஒரு இணையவழி கருத்தரங்கில் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் பேசியதாவது, “ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில் 40 ஆயிரம் தமிழ் நுால்களுடன் நுாலகம் அமைந்துள்ளது. இங்குள்ள தமிழ் துறையில் சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை ஆராயப்படுகிறது.

ஜெர்மனியில் உள்ள இலங்கை தமிழர்கள் உட்பட, வெளிநாட்டவர்களுக்கும், இந்தத் துறை தமிழ் கற்பித்து வருகிறது. இதுபோல் பல்வேறு சேவைகளை செய்துவரும் இந்த தமிழ்துறை, தற்போது மூடப்படும் சூழலில் உள்ளது. அதை மீட்டெடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், இந்தப் பிரச்சினை குறித்து மாநில தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது, “அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரூ.10 கோடியை தமிழக அரசு வழங்கியது. ஆனால், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பது உள்ளிட்ட தமிழ்மொழி சார்ந்த பணிகள் விரைவாக நடப்பதில்லை என்பதான புகார்கள் உள்ளன.

தற்போதைய சூழலில், அனைத்து துறைகளிலும் 20% செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், வெளிநாடுகளில் தமிழ் புலங்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த முடியும். கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை மூடப்படுவது குறித்து ஆய்வுசெய்து முடிவெடுக்கப்படும்” என்றார்.