பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஒப்புக் கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான ராஜிவ் கவுடா (காங்கிரஸ்) பிகே ஹரி, (காங்கிரஸ்) மற்றும் பாஜகவின் பிரபாகர் கோரே, மஜதவின் குபேந்திர ரெட்டி ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது.. இதையொட்டி இந்த 4 இடங்களுக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பாஜகவுக்கு இரு இடங்களும் காங்கிரஸ் மற்றும் மஜத அணிக்கு 2 இடங்களும் கிடைக்கும். இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்றொரு இடம் மஜதவுக்கு ஒதுக்கப்பட்டது.
மஜத கட்சியினர் முன்னாள் பிரதமரும் கட்சித் தலைவர்களில் ஒருவருமான தேவே கவுடா போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். மத்திய மோடி அரசை எதிர்க்க மாநிலங்களவையில் சரியான தலைவர் தேவை என்பதால் தேவே கவுடாவை போட்டியிடக் காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி தனது ஆதரவை தெரிவித்தது.
காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட தேவே கவுடா ஒப்புதல் அளித்துள்ளார். நாளை அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 1994-96 ஆம் வருடங்களில் மாநிலங்களவை உறுப்ப்பினராக இருந்த தேவே கவுடா அப்போது பிரதமராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கதாகும்.