புதுச்சேரி:
கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரத்திற்கு தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக புதுச்சேரி வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கே முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நான்கு பேர் ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கி வந்தனர். அங்கே ஏற்கெனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த குழி அருகே உடலைக் கொண்டு வந்த அவர்கள், குழிக்குள் சடலத்தை கயிறு கட்டி இறக்காமல் அப்படியே தூக்கி வீசி, தள்ளி விட்டது போல் போட்டு விட்டு, திரும்பியே பார்க்காமல் அங்கிருந்து சென்றனர்.

இது வீடியோவாக பிடிக்கப் பட்டு, கொரோனா தொற்று பாதித்தவரின் உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசி செல்வதாக இணையத்தில் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூறிய போது…. “உடலை முழுவதும் புதைப்பதற்கு ஏற்ற வகையில் முன்னேற்பாடு செய்து உள்ளாட்சித்துறையிடம் தந்தோம். சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்யவில்லை.நாங்கள் விசாரித்த வகையில், தூக்கிச் சென்ற ஊழியர் ஒருவரின் கையில் இருந்து நழுவியதால் உடல் குழியில் விழுந்து விட்டதாக அறிந்தோம். இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் விளக்கம் கோரியுள்ளார்” என்றனர்.

இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரத்திற்கு தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக புதுச்சேரி வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்கவும், எதிர்காலத்தில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யும் போது இறந்தவரின் மதத்திற்கு தகுந்தாற்போல் மரியாதையுடன் அடக்கம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்த்ப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.