சென்ன‍ை: தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கால், உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் ஊதிய இழப்பையும், வேலை இழப்பையும் எதிர்கொள்கின்றனர்.

ஐடி மற்றும் பிபிஓ முதலிய துறைகளில் ஊதிய வெட்டு மற்றும் பணியிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதாவது, அத்துறைகள்  ரத்தம் தோய்ந்த பாதையில் நடைபோடத் துவங்கியுள்ளன என்று வர்ணிக்கின்றனர் துறைசார் அவதானிப்பாளர்கள்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இத்துறைகளில், நூற்றுக்கணக்கான பணியாளர்கள், வரும் ஜூலை மாதம் வரை ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலர் தங்களின் பணியை இழந்துள்ளனர்.

தற்போது தங்களிடம் எந்த புராஜெக்ட்டுகளையும் கொண்டிராதவர்களின் நிலைமை இன்னும் மோசம். பல்லாண்டுகளாக பணிபுரியும் பலர், திடீரென பணியிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிலருக்கு, 3 மாத சம்பளம் மொத்தமாக கொடுக்கப்பட்டு பணியிலிருந்து விலகுவதற்கு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் அல்லது புதிய புராஜெக்ட்டுகள் வரும் வரை 1 மாதம் ஊதியமின்றி காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சில நிறுவனங்கள், நிலுவையிலுள்ள ஊதியங்களைக்கூட தருவதற்கு மறுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வேறு பல நிறுவனங்கள், தங்கள் கணக்கிலுள்ள அனைத்து விடுப்புகளையும் தற்போதைய சூழலில் எடுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்துவதுடன், அதற்கு மேலும் நீட்டிக்கப்படும் விடுமுறைக்கு ஊதிய இழப்பையும் அறிவித்துள்ளன.

இப்படியாக, கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள், கொடிய வைரஸைக் கட்டுப்படுத்துகிறதோ இல்லையோ, பலரின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்று புலம்புகின்றனர்.