தொழில் அனுமதிகள் பெற வழிமுறைகள் எளிதாக்கப்படும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு வருகிறது என்று “ஒளிரும் தமிழ்நாடு” டிஜிட்டல் மாநாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் “ஒளிரும் தமிழ்நாடு” டிஜிட்டல் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘தொழில்துறைக்கு அம்மாவின் அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும்’ என்று கூறியவர், சூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகளை அரசு அறிவிக்கும் என்று உறுதி அளித்தார்.
புதிய இயல்பு சூழ்நிலையில் முதன்மை மாநிலமாக மாறுவதற்கான டிஜிட்டல் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொற்றின் விளைவாக இன்று நம்முடைய வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி காப்பது, சில துறைகளில் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தே பணி புரிவது போன்ற மாற்றங்கள், புதிய இயல்பாகி வரும் சூழல் உருவாகியுள்ளது.
உலகப் பொருளாதாரம் படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா நோய் தடுப்புக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, தமிழ்நாட்டிலேயே தயாரிக்க ஊக்கமளிக்கும் வகையில், சிறப்பு சலுகைகளை நான் அறிவித்திருந்தேன். அதன் விளைவாகவும், தொழில் துறையினரின் சிறப்பான முயற்சிகளின் விளைவாகவும், இன்றைக்கு பல்வேறு நிறுவனங்கள், இப்பொருட்களின் உற்பத்தியைத் துவங்கி இந்தியாவெங்கும் வழங்கி வருகின்றன. எந்த ஒரு அவசரச் சூழ்நிலையிலும், பேரிடரிலும், நாட்டிற்கே துணையாக நிற்கும் தமிழ்நாட்டு மக்களின் திறன், இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
கொரோனா தொற்றின் பரவலிலிருந்து தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க, ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலத்திலும் மக்களின் வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, படிப்படியாக ஊரடங்குக்கு தளர்வுகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. சென்னை காவல்துறை ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 25 சதவீதப் பணியாளர்களுடன், பிற பகுதிகளில் தொழிற்சாலைகள் 100 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு வழிமுறைகளை தொழில் நிறுவனங்கள் முழுமையாக கடைபிடித்து வருவதை மனதார பாராட்டுகிறேன். அதே வேளையில், எந்தவிதமான தொய்வுமின்றி இந்த பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும். மாறி வரும் சூழ்நிலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சூழ்நிலையை பொறுத்து, மேலும் தளர்வுகளை அரசு அறிவிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில் வெளியான ‘இலாரா செக்யூரிட்டிஸ்’ (ELARA Securities) நிறுவனத்தின் ஆய்வில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக தெரிவித்துள்ளது. மிகவும் தொழில் மயமான மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்கள் பின்தங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு இயல்பு நிலையை நோக்கி படிப்படியாக முன்னேறி வருவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாடு அரசின் தீர்க்கமான செயல்பாடுகளுக்கும், நமது தொழில் துறையினரின் விடாமுயற்சிக்கும் இது தக்க சான்றாகும்.
மேலும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, பிணை சொத்தின்றி உடனடிக் கடன் வழங்கும் திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம், கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை நான் 31.3.2020–-ல் அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். இத் திட்டத்தின் கீழ், இதுவரை 955 நிறுவனங்களுக்கு 120 கோடி ரூபாய் செயல்பாட்டு மூலதனக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகுப்பின் முழுப் பயனையும் நமது தொழில் நிறுவனங்கள் பெறுவதற்காக 30.5.2020 அன்று மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கோவிட்-19 நிவாரண கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, உடனுக்குடன் கடன் தொகைகளை தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டுமென்று வங்கியாளர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
கொரோனா நோய்ப் பரவல், உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளன. இந்நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்நிலைக் குழுவினை எனது அரசு அமைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க டாக்டர் சி. ரங்கராஜனின் தலைமையில் பொருளாதார நிபுணர்கள், தொழில் முனைவோர், அரசு அலுவலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இத்தகைய சீரிய முயற்சிகளின் விளைவாக, சமீபத்தில் தொழில் துறை சார்பில், ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்சு, கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன், அவர்களது புதிய மற்றும் விரிவாக்க தொழில் திட்டங்களை துவங்கிட, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இத்திட்டங்கள் மூலம், 15,128 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 47,150 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த நிகழ்ச்சி, உலகத்தின் பார்வையை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பி உள்ளது.
இது மட்டுமின்றி, பல்வேறு தொழில் துறைகளில், உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் தலைமை அதிகாரிகளுக்கு, தமிழ் நாட்டில் முதலீடு செய்திடுமாறு நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். இவற்றில், ஆப்பிள், சாம்சங், அமேசான், ஏர்பஸ், ரோல்ஸ் ராய்ஸ், போயிங், ஜெனரல் எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்களும் அடங்கும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசின் செயல் திட்டமாக, நான்கு முக்கிய இனங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன்.
தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலையினை விரைவாக அடைந்திட உதவி புரிதல்
புதிய முதலீடுகளை ஈர்த்தல்
அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாக்குதல்
கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான பணப்புழக்கத்தினை அதிகரித்தல்
இத்தகு செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடுவதன் மூலம் புதிய தொழில்களும், ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழில்களும், மேலும் சிறப்புடன் செயல்படவும், கொரோனா நமக்கு இட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இயலும்.
கொரானா தொற்று பரவலின் விளைவாக, வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்ப சென்றுள்ளார்கள். எனினும், எதிர்பாராத இச்சூழலில், தொழில் உற்பத்தி பாதிப்படையாமல் இருக்க, தமிழ்நாட்டைச் சார்ந்த தொழிலாளர்களை பயன்படுத்தி, இயல்பு நிலையை எய்த, தொழில் துறையினர் முயற்சிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்திட தயாராக உள்ளது என்றும் இந்த நிறைந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுமட்டுமின்றி, வணிகம் புரிதலை எளிதாக்கிட, ஏற்கெனவே பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அளவிலும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, தொழிலாளர் துறை, மருந்தியல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவையிடமிருந்து, தொழில் அனுமதிகள் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில், தொழில் முதலீட்டிற்கான சாதகமான சூழ்நிலை மேலும் வலுவடையும் என்பதில் ஐயமில்லை.
இக்கட்டான இக்காலத்தில், உங்களின் நலத்தையும், உங்கள் பணியாளர்களின் உடல் நலம் மற்றும் பணி பாதுகாப்பையும் உறுதி செய்திடுமாறு உங்கள் அனைவரையும், அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும், தொழில் துறைக்கும் அம்மாவின் அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம், பல்வேறு துறைகளின் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.