சென்னை:
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு முதன்முதலாக இயக்குநர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதற்கு  நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதம் எழுதி உள்ளார்.
 சென்னையில் 2008ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்மொழி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிறுவனத்தின் கவுரவ தலைவராக தமிழக முதல்வர் இருந்து வருகிறார்.  இது மத்திய அரசின் நிறுவனம் என்பதால் சென்னையிலுள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் இருந்து ஒருவரை பொறுப்பு இயக்குனராக நியமிப்பது வழக்கமாக இருந்தது.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பதிவாளரான பழனிவேல் என்பவர் பொறுப்பு இயக்குனராக இருந்து வந்தார். முழு நேர இயக்குனரை நியமிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டு வந்தனது.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதுதான் முதன் முறையாக முழுநேர இயக்குனர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரனை நியமித்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார்.
இதற்கு நன்றி தெரிவித்து நடிகர்  ரஜினிகாந்த் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில்,  “தமிழ் மொழியை மேம்படுத்துவதில் உங்கள் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.