திருச்சி:
திருச்சி அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், பிறந்து 30நாட்களே ஆன பச்சிளங்குழந்தைக்கு எலி மருந்து கொடுத்து கொலை செய்துள்ளார், குழந்தையை பெற்றெடுத்த தாய். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில், பல்வேறு குடும்பங்களில் சண்டைச் சச்சரவுகளும் தலைக்தூக்கத் தொடங்கி உள்ளன. ஒரே வீட்டுக்குள் அனைவரும் அடங்கி ஒடுங்கி கிடப்பதால், தேவையற்ற விவாதங்களும், விவாதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வேலையின்மை காரணமாக ஏற்பட்டள்ள மன அழுத்தம் ஒருபுறம், கையில் பணம் இல்லையே என்ற ஏக்கம் மற்றொருபுறம் பலரது வீடுகளில் சண்டை சச்சரவுக்கு காரணமாகி வருகின்றன.
இதுபோன்ற குடும்பச்சண்டைகளால், அதிகமாக பாதிக்கப்படுவது அவர்களது குழந்தைகள் தான். பெரியவர்களின் கோபத்துக்கு ஆளாவதும் குழந்தைகள்தான்.
இதுபோல, திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே கணவன் மனைவிக்குள் ஏற்பட்டுள்ள தகராறால், பெற்ற தாய், பிறந்து 30 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு, எலியை கொல்லும் மருந்து வகையான எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்துள்ளார், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாயையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். குழந்தையின் தாயான நித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.