சென்னை:
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை அங்கு தனது குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதையடுத்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி , இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சேகர் பாபு எம்.எல்.ஏ., மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர், கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க தொண்டர்களான அசோக் குமார், மகாலட்சுமி ஆகியோரின் திருமணத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் அவர் வழங்கினார்.
இதேபோல தமிழகத்தின் பல இடங்களிலும் திமுக தொண்டர்கள், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூரி மரியாதை செலுத்தி வருகின்றனர்.