சென்னை: ஜூன் 7ம் தேதி சேலத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர எடப்பாடி பழனிசாமி.
சேலத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க 5 ரோடு மையப்பகுதியாக கொண்டு மேம்பாலம் அமைக்கப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி 2016ம் ஆண்டு பிப்ரவரியில் மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.ஓரிரு நாளில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
அதில் சாரதா கல்லூரி சாலையில் ராமகிருஷ்ணா பிரிவு ரோட்டில் இருந்து ஏவிஆர் ரவுண்டானா வரை ஒரு பிரிவாகவும், சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து குரங்குச்சாவடி வரை மற்றொரு பிரிவாகவும் மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பணிகளுக்காக ரூ.440 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இந்த இரு சாலையிலும் 6.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 5 ரோட்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது ஓமலூர் மெயின்ரோட்டில் 4 ரோட்டில் இருந்து 5 ரோடு வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்ட், சொர்ணபுரி, 4 ரோடு,5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலப்பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.
தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஜூன் 7ம் தேதி சேலத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.