கொரோனா முடக்கம், இந்திய விவசாயத்தில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? மற்றும் ஏதேனும் நன்மையைக் கொண்டு வந்துள்ளதா? என்று அலசுகிறார் கட்டுரையாளர் சிராஜ் ஹுசைன்.
அவர் கூறியுள்ளதாவது, “வேளாண் வளர்ச்சிக்கு யார் பொறுப்பு? மத்திய அரசா? அல்லது மாநில அரசுகளா? இது எப்போதும் விவாதத்தில் இருந்துவரும் ஒரு அம்சம். ஆனால், இந்த கொரோனா காலத்தில், மோடி அரசு மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
வேளாண் பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் வேளாண் கொள்கைகள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் வணிகம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மாற்றங்கள் மற்றும் ஒப்பந்த விவசாயத்தை நிர்வகிப்பதற்கான புதிய நிர்வாக அமைப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
வேளாண் வணிகத்தில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதானது, விவசாயிகளுக்கு நன்மையைக் கொண்டு வரும். அதாவது, அதிக வாங்குபவர்கள் விவசாயிகளை நோக்கி வருவார்கள் மற்றும் கூடுதல் விலையும் கிடைக்கும்.

மேலும், மிகவும் அத்தியாவசியமான தனியார் முதலீடும், வழங்கல் இணைப்பில் வந்துசேரும். இது, இந்த முடக்க காலத்தின் ஒரு சாதகமான அம்சம்.
மோடி ஆட்சியின் முதல் 5 ஆண்டுகளை, வேளாண்மை தொடர்பாக கலவையான செயல்பாடுகளைக் கொண்டதாய் மதிப்பிடலாம்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண்மை, வனம் மற்றும் மீன்பிடித்தல் ஆகிய மூன்றும் சேர்ந்து 16.1% ஐ வகிக்கின்றன. ஆனால், இந்த மூன்று துறைகளும் 44% வேலை வாய்ப்பை வழங்குகின்றன. அதேசமயம், எதிர்வரும் 2021ம் ஆண்டில், கொரோனா முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருந்தோர், விவசாயத்தை நோக்கி திரும்புவதால், அத்துறையின் ஆட்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதனால், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் வேளாண் கூலி குறைதல் உள்ளிட்ட பல மாற்றங்கள் ஏற்படும். கடந்த 4 ஆண்டுகளாக, வேளாண் வருவாயை 2 மடங்காக அதிகரிப்பது என்பது ஒரு கோஷமாக இருந்து வருகிறது.
மோடி அரசின், இரண்டாம் பருவத்தின் முதல் ஆண்டின் ஒரு வெற்றிகரமான விஷயம் என்னவெனில், PM-Kisan திட்டத்தை, குறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகளுக்கு விரிவாக்கியுள்ளதுதான். இரண்டாம் பருவத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 87 மில்லியன் நில உரிமையாளர்கள் தவணைகளைப் பெற்றுள்ளனர்.
தொலைநோக்கான முறையில் நன்மை தரக்கூடிய சில நல்ல முடிவுகள், கால்நடை வளர்ப்பு, பால் துறை மற்றும் மீன்வளத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் 2024ம் வரை, மொத்தம் 530 மில்லியன் கால்நடைகளுக்கு பாதம் மற்றும் வாய் தொடர்பான நோய்களை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் மொத்த செலவையும் ஏற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மீன்வளத்துறை கடந்த 5 ஆண்டுகளில் 7.5% வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2018-19 ஆண்டுகளில் கடல்சார் பொருட்களின் வணிகம் 6.73 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது.
எனவே, இரண்டாம் பருவ மோடி அரசின் இரண்டாவது ஆண்டில், வேளாண் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வரும் 2021-22ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7% என்பதாக வளர்ச்சியடைந்தால், வேளாண்மை மற்றும் தொடர்புடைய துறையில் அதிகளவு தனியார்துறை முதலீடுகள் வந்துசேரும் என்று எதிர்பார்க்கலாம்” என்றுள்ளார் அவர்.