டெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக, டெல்லி உயர்நீதிமன்றம், அதன் கிளை நீதிமன்றங்கள் வரும் 14ம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதன் பாதிப்பு அதிகம்.
தலைநகர் டெல்லியில் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ கடந்திருக்கிறது. இந் நிலையில், கொரோனா பரவல் காரணமாக டெல்லி உயர்நீதிமன்றம், அதன் கிளை நீதிமன்றங்கள் வரும் 14ம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முடிவை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக மற்றும் பொது மேற்பார்வைக் குழு இன்று எடுத்தது. ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை உயர் நீதி மன்றத்தில் பட்டியலிடப்பட்ட நிலுவையில் உள்ள அனைத்து விஷயங்களும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல், ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை துணை நீதிமன்றங்களுக்கு முன் பட்டியலிடப்பட்ட வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel