திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பின் உச்சம் தற்போது வெப்சீரிஸ்களுக்கும் வந்துவிட்டது.
அந்த வகையில் தற்போது ஜீ5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் காட்மேன் என்ற வெப் சிரீஸ் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெப் சீரிஸின் டீசர் யூடியூபில் வெளிவந்துள்ளது. இந்த டீசரில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=nUZPe35iDtg&feature=youtu.be
“பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்திரத்துல சொல்லி இருக்கு” “நீ வேதம் படிக்கணும் அய்யனார்”, “இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கனும்னு காட்ட போறேன்” . போன்ற சர்ச்சைக்குரிய வசனங்கள் அந்தணர்களை அவமதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதெல்லாம் போதாது என்று பிராமணராக மாற முயலும் டேனியல் பாலாஜி ஒரு பெண்ணுடன் படு நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சிகளும், சரக்கடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன இதனால் பிராமணர் அமைப்புகள் மட்டுமல்லாது, இந்து அமைப்புகளும் காட்மேன் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
தமிழக பாஜக சட்டப்பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் இந்த படம் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் படத்தை வெளியிடக் கூடிய தொலைக்காட்சி ஊடகம் போன்றவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்காவிட்டால் தொலைக்காட்சியின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் Godman டிரெய்லரில் குறிப்பிட்ட சமூகத்தை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக நாகை எஸ்.பி அலுவலகத்தில் அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.