180 பேருக்கு பதிலாக நாலு பேர் பயணம்.. விமானத்துக்கு 20 லட்ச ரூபாய்..
ஊரடங்கு காட்சிகளை ஊடகங்களில் காணும் போது, ஈரம் உள்ளோர் நெஞ்சில் உதிரம் கொட்டுவது நிஜம்.
நடைப்பயணமாகக் கொளுத்தும் வெயிலில் குழந்தையை இடுப்பில் சுமந்து செல்லும் பெண்கள், ஊனமுற்ற தந்தையைச் சைக்கிள் கேரியரில் உட்கார வைத்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்குப் பயணிக்கும் சிறுமி என ,தொலைக்காட்சியில் பார்க்கும் காட்சிகள் என்றும் மனதை விட்டு நீங்காத ரகம்.
இந்த நிலையில் மதுபான அதிபர் ஒருவரின் குடும்பத்தார் மேற்கொண்ட விமான பயணம் ,அதிர வைக்கிறது.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த அந்த தொழில் அதிபர், போபாலில் 2 மாதமாகச் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குடும்பம் என்றால் எத்தனை பேர்?
மகள், 2 குழந்தைகள், ஒரு பணிப்பெண் என நால்வர் மட்டும் தான்.
180 பேர் அமரும் அந்த தனியார் விமானத்தில் 4 பேர் மட்டுமே ஜாலியாக அமர்ந்து டெல்லி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவலைத் தடுக்க தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், இந்த பயணமாம்.
அந்த விமானத்துக்கு வாடகை எவ்வளவு தெரியுமா?
20 லட்சம் ரூபாய்.
– ஏழுமலை வெங்கடேசன்