திருவனந்தபுரம்
இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.
நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதையொட்டி கேரள மாநிலத்தில் அன்று முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டதால் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. ஆகவே ஆன்லைனில் மது விற்பனை செய்யக் கேரள அரசு தீர்மானித்தது. அதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுப் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று முதல் கேரளாவில் மது விற்பனை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். மதுக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் எனவும் அதற்கான டோக்கன்களை ஆன்லைனில் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கக் கேரள அரசு BEVCO என்னும் செயலியை உருவாக்கி உள்ளது. மதுப் பிரியர்கள் அதை மொபைலில் தரவிறக்கம் செய்து முன்பதிவு செய்து டோக்கன்களை பெற வேண்டும். தினமும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை டோக்கன்கள் தரப்படும். அதில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று மது வாங்க வேண்டும். டோக்கன் இல்லாதோருக்கு மது வழங்கப்படமாட்டாது என அறிவிக்கபட்டுள்ளது.