டில்லி
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவில்42.4% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 57.18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 3.53 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 24.56 லட்சமாக உள்ளது. இதில் அமெரிக்காவில் அதிக அளவிலும் பிரேசிலில் அதற்கு அடுத்தபடியாகவும் பாதிப்பு உள்ளது. இந்த வரிசையில் இந்தியா 10 ஆம் இடத்தில் உள்ளது.
இன்று இந்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இதுவரை இந்தியாவில் மொத்தம் 1,51,767 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 64,426 பேர் குணமடைந்துள்ளதால் குணமடைந்தோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளது. இதைப் போல் இந்தியாவில் இறப்பு விகிதம் 2.86 சதவீதமாக உள்ளது. ஆனால் உலகளவில் 6.36 சதவீதமாக உள்ளது.
கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் தற்போது 624 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன இதில் அரசு ஆய்வகங்கள் 435, தனியார் ஆய்வகங்கள் 189 ஆகும். இன்று மட்டும் 1,16,041 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 32,42,160 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றுக்கென உள்ள பிரத்தியேக மருத்துவமனைகளில் 1,58,747 தனி படுக்கை வசதிகள் உள்ளன. அத்துடன் 20,355 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளும், 69,076 ஆக்ஸிஜன் உதவியுடன் கூடிய படுக்கை வசதிகளும் உள்ளன.
கொரோனா தொற்றுக்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக சுகாதார மையங்களில் 1,32,593 தனி படுக்கை வசதிகள் உள்ளன. தவிர 10,903 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளும், 45,562 ஆக்ஸிஜன் உதவி படுக்கை வசதிகளும் உள்ளன” என அறிவிக்கப்பட்டுள்ளது.