பாட்னா: பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் பெற்ற தாய் இறந்தது தெரியாமல் குழந்தை ஒன்று எழுப்ப முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை பரிதாபத்துக்கு உரிய நிலையாக மாறி உள்ளது. உணவின்றி, பணமின்றி சொந்த ஊர் செல்ல வழியின்றி ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
நாள்தோறும் இப்படி செய்திகள் வெளியாக, பீகாரில் புலம்பெயர்ந்த தொழிலாளரான தாய் ஒருவர் இறந்தது தெரியாமல் குழந்தை விளையாடும் வீடியோ வைரலாகி உள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு நிலையத்தில் 23 வயது பெண் ஒருவர் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயிலில் வந்திறங்கினார். அப்பெண் சகோதரி, அவரின் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் கதிஹார் சென்று கொண்டு இருந்தார்.
கடும் வெயில், பசி ஆகிய காரணங்களினால் முசாபூர் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்தார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் ரயிலில் இறந்துவிட்டதாக ரயில்வே அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலை நடைமேடையில் அவரது உடல் கேட்பாரற்று வைக்கப்பட்டு இருக்க, அந்த பெண்ணின் மகன் தயார் இறந்தது தெரியாமல் தாயின் உடலின் மேல் போர்த்திய துணியை இழுத்து விளையாடி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.