கொல்கத்தா
மேற்கு வங்கத்துக்கு எங்களிடம் தெரிவிக்காமல் 36 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 25 ஆம்தேதி முதல் நாடெங்கும் கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலைகள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டதால் பலரும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கினார்கள்.
கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. அதையொட்டி கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ய்ய்ர் செல்ல ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்க தொடக்கியது. இதன் மூலம் இதுவரை சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் சென்றுள்ளதாக ரயில்வே தகவல் அளித்துள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்வோருக்கு உணவு, குடிநீர் வழங்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்தன.
இந்த ரயில்கள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,”மும்பையில் இருந்து 36 ரயில்கள் மேற்கு வங்கத்துக்கு எங்களிடம் தெரிவிக்காமலேயே வந்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிர அரசிடம் கேட்ட போது அவர்களுக்கும் இந்த விவரம் தாம்தாமாஅக தெரிய வந்துள்ளதாகக் கூறி உள்ளனர். தானாகவே திட்டமிட்டு ரயில்வே நிர்வாகம் இவ்வாறு செயல்படுகிறது” எனக் குற்றம் சாட்டி உள்ளார்.