டெல்லி: கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் கண்டறியும் ஆர்டிபிசிஆர் சோதனைகளுக்கு 4500 ரூபாயை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் நிர்ணயம் செய்திருந்தது. தற்போது இந்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு ரூ .4,500 விலையை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில், ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா, ஆர்டி-பி.சி.ஆர் சோதனையை நடத்துவதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலையான ரூ .4,500 இப்போது பொருந்தாது என்று கூறினார்.
விலை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மாநிலங்கள் இப்போது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களின் பட்டியலுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் மற்றும் கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான செலவை நிர்ணயிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளின் விலை மற்றும் சோதனையை மேற்கொள்வதற்கான முயற்சிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஐசிஎம்ஆர் மார்ச் 17 தேதியிட்ட ஒரு கடிதத்தில் ஒரு சோதனைக்கான உச்ச வரம்பை ரூ .4,500 என பரிந்துரைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஏப்ரல் 8 ம் தேதி, உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் இலவசமாக கொரோனா வைரஸ் நோயை பரிசோதனைகளை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.