பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 1ம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் முடிவுக்காக காத்திருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா கூறி இருக்கிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா தொற்றுகள் குறையாததால் இப்போது 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை முன்னிட்டு அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டன. 4ம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட ஒரு சில தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது குறித்து நேற்று பேசிய கர்நாடகா மாநில அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி இந்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடியூரப்பாவிடம் பேசினோம். அதன் படி வரும் 1 ம் தேதி முதல் கோயில்கள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
இந் நிலையில், வரும் 1ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் எடியூரப்பா. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். அவரது முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.