சென்னை:
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் ஆகஸ்டு மாதம் திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அரசு ஆசிரியர்கள் மத்தியில் இது தொடர்பாக வாட்ஸ்அப் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் தேர்வுகளை அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட   10-ம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதே வேளையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த பரபரப்பான சூழலில்   தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், 10-ம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்   தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புக்கு செப்டம்பரில் வகுப்புகளை தொடங்கவும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆகஸ்டு மாதம் பள்ளிகள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், நாடு முழுவதும்,. பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில்,  ஜூன் மாதம் பள்ளிகள் சமுக இடைவெளியுடன் 30 சதவிகித மாணவர்களுடன் திறக்கப்படும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.