டில்லி
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள 11 மாநகராட்சிகளில் சென்னை 2 ஆம் இடத்தில் உள்ளது.
நாடெங்கும் கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னை மாநகரில் மிகவும் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாநிலங்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையை விட சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னை நகரில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். முதல் இடத்தில் மும்பை நகர் உள்ளது. நேற்று வரை இரண்டாம் இடத்தில் இருந்த அகமதாபாத் இன்று மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் அதிகமாகவும் மரணம் அடைந்தோர் விகிதம் குறைவாகவும் உள்ளது. இந்தியாவில் மொத்தம் மரணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 1% க்கும் குறைவாகவே உள்ளது. அதைப் போல் மொத்த நோயளிகளுடன் ஒப்பிடுகையில் சென்னையில் மரணமடைந்தோர் விகிதமும் 1% க்கும் குறைவாகவே உள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், “மகாராஷ்டிரா, தமிழகம், டில்லி, உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சியில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக உள்ளது. இனி வரும் 2 மாதங்களில் இந்த மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்ப்பைபலபடுத்த வேண்டும். இல்லையெனில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கலாம்.” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள எச்சரிக்கையின்படி இனி வரும் 2 மாதங்களில் கூடுதல் நடவடிக்கைகளாக வீடு வீடாகப் பரிசோதனை, சமூக விலகல், முகக் கவசம் தனிமைப்படுத்தல் ஆகியவை மேலும் தீவிரப்படுத்தலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது. ஏற்கனவே சென்னையில் பல குடிசைப்பகுதிகளில் கவனம் செலுத்தி வரும் மாநகராட்சி மேலும் அதிக கவனம் செலுத்தக் கூடும்.