சென்னை:
விவசாயிகளை பாதிக்கும் வகையிலான மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதைக் கண்டித்து மின்சார அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சாா்பில் மே 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காகவே மத்திய மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதை நிறைவேற்றுவதற்காக தமிழக அரசுக்கு சில நிபந்தனைகளையும் மத்திய அரசு விதித்திருக்கிறது.
அதன்படி பயன்படுத்தும் இலவச மின்சாரத்துக்கான கட்டணத்தை விவசாயிகளிடமிருந்து மின்சார வாரியம் கட்டாயம் வசூலிக்க வேண்டும். வசூலித்த பிறகு தமிழக அரசு விரும்பினால், அந்த கட்டணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி செலுத்திக் கொள்ளலாம்.
எந்த வகையிலும் மின்சாரத்தை இலவசமாக எவருக்கும் வழங்கக்கூடாது என்பதாகும். இதை தமிழக விவசாயிகள் எவரும் ஏற்கமாட்டாா்கள்.விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்கள், நகரங்கள், பேரூா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அஞ்சலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மின்சார அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் சாா்பில் மே 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடைபெறும். 5 பேருக்கு மிகாமல் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.