லண்டன்: இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு அறிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதை தடுக்கும் விதமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி வெளி நாடுகளில் இருந்து ஜூன் 8 முதல் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் தாங்களாகவே சுய தனிமைப்படுத்தலுக்கு கட்டாயம் உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதை கடைபிடிக்காதவர்களுக்கு ஆயிரம் பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து நுழைபவர்கள் அவர்களது விவரங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும்.
14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆட்படுபவர்கள் அவ்வவ்பொழுது அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடல்நிலை தொடர்பான தகவல்களை கூற வேண்டும். இந்த விதிமுறைகள் அயர்லாந்து நாட்டில் இருந்து வருபவர்களுக்கும், மருத்துவம், விவசாய பணிகளை மேற்கொள்வோர்களுக்கு பொருந்தாது. அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கான போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள வசதிகளை கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் இங்கே முழுமையான லாக்டவுனை அமல்படுத்தவில்லை. எல்லைகள் மூடப்படவில்லை என்றார்.
இங்கிலாந்தில் தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 54 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 ஆயிரத்து 393 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.