டில்லி

ல் கொய்தா தீவிரவாதியான முகமது இப்ராகிம் சுபைர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் சுபைர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சிவில் இஞ்சினியரிங் படிப்பை முடித்த பிறகு பட்ட மேற்படிப்பு கல்விக்காக அமெரிக்கா சென்றார்.  அங்கு அவர் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த பிறகு 2006 ஆம் வருடம் ஓஹையோ மாகாணத்திலுள்ள டோலேடோவில் வசிக்கத் தொடங்கினார்.

கடந்த 2007 ஆம் வருடம் அவர் ஒரு அமெரிக்கப் பெண்ணை மணந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.  அவருடைய சகோதரரான யாகியா ஃபரூக் முகமதுவுடன் இணைந்து அல்கொய்தா தலைவர் அன்வர் அல் அவால்கியின் போதனைகளை சுபைர் பரப்பி வந்தார்.  2011 ஆம் வருடம் ஏமனில் நடந்த ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலில் அன்வர் அல் அவால்கி கொல்லப்பட்டார்.   அதன் பிறகு 2015 ஆம் வருடம் சுபைர் மற்றும் யாகியா கைது செய்யப்பட்டனர்.

யாகியா மற்றும் சுபைர் மீது தீவிரவாதத்துக்கு நிதி அளித்தது உள்ளிட்ட பல வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது.  யாகியாவுக்கு 27 வருடமும் சுபைருக்கு 5 வருடமும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.   இவர்களுடன் மேலும் இரு அல்கொய்தா தீவிரவாதிகளான ஆசிஃப் அகமது சலிம், மற்றும் சுல்தான்ரூம் சலிம் ஆகியோருக்கும் தண்ட்னை வழங்கப்பபட்டது.   யாகியா மற்றும் சுபைர் மீது வங்கி மோசடி வழக்கிலும் தண்டனை அளிக்கப்பட்டது.

தற்போது 40 வயதாகும் முகமது இப்ராகிம் சுபைர் தற்போது இந்தியாவுக்கு அமெரிக்க அரசால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.  அவர் நேற்று முன் தினம் அம்ரிதசரஸ் வந்தடைந்தார்.  சுபைர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகத் தெலுங்கானா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு இவர் பணம் மற்றும் பல உதவிகள் செய்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.