கடந்த வாரம் வழக்கம் போல அடையாறு காவல்நிலைய காவலர் மரியம் புஷ்ப மேரி தனது வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாறு பஸ் டிப்போவில் படுத்திருந்த 65 வயது தனலட்சுமியின் நிலைமையை பார்த்து விசாரித்துள்ளார். அப்போது தான் தெரிந்துள்ளது இவரின் பரிதாப நிலை.
கும்பகோணத்தை சேர்ந்த தனலெட்சுமி வேலை தேடி சென்னை வந்து ஒரு ஆண்கள் விடுதியில் சமையல் வேலைக்கு மாதம் ரூ. 6000/- சம்பளத்தில் ஒரு வருடமாக பணியாற்றியுள்ளார். இந்த கொரோனா ஊரடங்கினால் மெஸ் பூட்டப்பட, ஊருக்குச் செல்லும் முயற்சியில் கோயம்பேடு வந்துள்ளார். ஆனால் இங்கே வந்த பின்பு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், தன்னார்வலர்கள் தினமும் தரும் உணவினை சாப்பாட்டு மார்கெட்டிலேயே தங்கிவிட்டார்.
திடீரென கோயம்பேடு மார்கெட்டும் மூடப்பட்டு விட்ட நிலையில் கும்பகோணத்தில் இருந்த கணவரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். அவரால் சென்னை வர முடியாத சூழலில் அடையாறில் உள்ள உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டு மனைவியை அங்கே சென்று தங்க சொல்ல, தனலட்சுமியும் அங்கே சென்று தங்கியுள்ளார்.
“ஆனா அங்க அவங்க என்னை படுத்தின கொடுமை தாங்கவே முடியாதது. வேற வழியில்லாம பொறுத்திட்டு இருந்தேன். ஆனா அவங்களும் கொரோனா பயம்னு சொல்லி என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க. கைல பணம் ஏதுமில்லாததால் நான் இங்கேயே தங்கிட்டேன்” என்று அவரின் நிலையை விவரித்துள்ளார்.
இவரின் கதையை கேட்ட அடுத்த நொடியே சற்றும் யோசிக்காமல் தனலட்சுமியை தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று தங்க வைத்துக்கொண்டார் மேரி. இப்போது அவருக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி சற்றும் மனம் நோகாமல் பராமரித்து பார்த்து வருகிறார் இந்த மனித நேயமிக்க காவலர் மேரி.
காவல்துறையினர் தனலெட்சுமியின் கணவரை தொடர்பு கொண்டு மாவட்டங்களுக்கிடையே பஸ் போக்குவரத்து தொடங்கிய பின் அவரை பத்திரமாக அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளதாக கூறுகிறார் மேரி.
இந்த கடுமையான சூழலில் வயதான அப்பெண்மணியை கொஞ்சமும் இரக்கமின்றி விரட்டியடித்த அந்த உறவினர் ஒரு புறம். விசயம் அறிந்து, அவரை உடனடியாக தன்னுடன் அழைத்துச்சென்று அனைத்து உதவிகளையும் வழங்கிய மேரி போன்ற மனிதநேயமிக்கவர்கள் ஒரு புறம்.
– லட்சுமி பிரியா