மும்பை: இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 2000 பணியாளர்கள் வாட்ஸ்ஆப் மூலம் தங்கள் நிறுவன நிர்வாகத்திடமிருந்து அச்சுறுத்தும் வகையிலான அழைப்புகளைப் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனம், சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமாகும்.
மே 31ம் தேதி நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைவதற்குள் ராஜினாமா செய்துவிடும்படியும், இல்லையேல் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்றும் அதில் மிரட்டப்பட்டதாக சில ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக, இத்தகைய வாட்ஸ்ஆப் அழைப்புகளில், உரையாடலை பதிவுசெய்ய முடியாது என்பதால், இத்தகைய அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரடி அழைப்புகள், பணிநீக்கம் முதல் வேறு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள் தொடர்பான ஆலோசனைகள் வரை பலவிதங்கள் இருக்கின்றன.
இந்த நிறுவனத்தின் சம்பளத் தேதி ஒவ்வொரு மாதமும் 18 அல்லது 19ம் தேதிகளிலேயே வழங்கப்படுவதால், தங்களின் வேலை பறிபோகும் என்று பெரும்பாலான பணியாளர்கள் கவலை கொள்கிறார்கள்.
அதேசமயம், மேலாளர் நிலையிலுள்ள சில பணியாளர்களுக்கு, “தற்போது வணிகம் மிகவும் மந்தமாக உள்ளது. பல கிளை அலுவலகங்களை நாம் மூடி வருகிறோம். பல பணியாளர்களை ராஜினாமா செய்யுமாறு கூறிவிட்டோம், உங்களுக்கு மே 31வரை அவகாசம் இருக்கிறது” என்பதான அழைப்புகள் வருகின்றன என்பதையும் கவலையுடனும் மிரட்சியுடனும் பகிர்ந்து கொள்கின்றனர்.