டெல்லி:
ரும் 25ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான பயணக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்து உள்ளது மத்திய அரசு.
அதன்படி, குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம்  ரூ.3500 முதல் அதிகப்பட்சமாக ரூ.10ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வரும் திங்கட்கிழமை (மே 25ந்தேதி) கொரோனா ஊடரங்கால் முடக்கப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானத்துறை அறிவித்து, அதற்கான வழிமுறைகளை வெளியிட்டது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாத சூழலில், பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யும் விதமாக உள்ளூர் விமானப் போக்குவரத்து திங்கள் முதல் தொடங்கவுள்ளது. இதற்கான கட்டண விவரங்களை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதையடுத்து இன்று காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங்பூரி,  அடுத்த 3 மாதங்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதே கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
அதன்படி, 0-30 நிமிடங்கள், 30 – 60 நிமிடங்கள், 60-90 நிமிடங்கள், 90-120 நிமிடங்கள், 120-150 நிமிடங்கள், 150-180 நிமிடங்கள், 180-210 நிமிடங்கள் என 7 வகைகளாக விமானங்கள் பிரிக்கப்படும். இதன் அடிப்படையில் கட்டணங்கள் இருக்கும்.
உதாரணமாக டெல்லியில் இருந்து மும்பைக்கான விமான கட்டணம் குறைந்தது ரூ. 3,500-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரமாக இருக்கும். அடுத்து வரும் 3 மாதங்களுக்கு இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.