பெங்களூரு
நேற்று பெங்களூருவை அதிரவைத்த மர்ம ஒலி எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு காரணமாக உலகமே அமைதியில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு நகரில் திடீரென இடி சத்தம் போல் ஓர் ஒலி வந்தது. இது மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியது. இந்த சத்தம் குறித்து விதம் விதமான வதந்திகள் பரவத் தொடங்கி மக்களை மேலும் அச்சுறுத்தியது.
பெங்களூரு நகரில் வேற்று கிரக வாசிகளான ஏலியன்கள் படை எடுத்து வந்துள்ளதாக வதந்திகள் பரவின. பலரும் தாங்கள் ஏலியன்களிடம் தப்பி வந்ததாக அந்த வதந்திக்குக் கண், காது, மூக்கு வரையத் தொடங்கினர். அதற்குள் அம்பன் புயலால் வளி மண்டலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மற்றொரு வதந்தி புறப்பட்டது. போர் விமானங்கள் வட்டமிடுவதாகவும் ஒரு சிலர் கதை கூறினர்.
இது குறித்துப் பாதுகாப்பு அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், “போர் விமானங்கள் வானில் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். அவ்வகையில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து போர் விமானங்கள் கிளம்பி புறநகர்ப் பகுதியில் பயிற்சிகள் செய்தன. இந்த சப்தம்தான் ஓசைக்குக் கரணம்.
இதை சோனிக் பூம் என அழைப்பது வழக்கமாகும். காற்றில் ஒரு பொருள் அதிக வேகத்தில் பயணிக்கும் போது எழும் ஒலிக்குப் பெயர் சோனிக் பூம் ஆகும். இது பயங்கர ஒலியை உருவாக்கும். இது இடியோசைக்கு ஒப்பான ஓசையாக இருக்கும். பெங்களூருவில் இந்த ஓசைதான் எழுந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.