புதுடெல்லி:
இந்தாண்டு சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான தேதி குறித்து, ஜூன், 5-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், ஆண்டு தோறும் நடத்துகிறது. இதன்படி, இந்தாண்டுக்கான, முதன்மை தேர்வு, வரும், 31-ஆம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, முதன்மை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக, கடந்த வாரம், யு.பி.எஸ்.சி., அறிவித்தது.
இந்நிலையில் மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் (யூபிஎஸ்சி) அதன் இணையதளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்வாணையம் மே 20 (இன்று) ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. நாடு தழுவிய மூன்றாம் கட்ட ஊரடங்கிற்குப் பின்னர் நிலைமையை மதிப்பாய்வு செய்யவும் கோவிட்-19 காரணமாக கட்டுப்பாடுகள், ஊரடங்கு நீட்டிப்பைக் கவனித்து ஆராய்ந்தது. தேர்வாணையம் இனி கட்டுப்பாடுகள் இருக்காது எனத் தீர்மானித்தது. தற்போது, தேர்வுகள் மற்றும் நேர்காணல்களை மீண்டும் தொடங்க முடியும்.
அதன்படி புதிய தேர்வுக்கான தேதியை ஜூன் 5 அன்று தேர்வாணையம் கூடி அன்றுள்ள நிலைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் யூபிஎஸ்சி இணையதளத்தில் தேதியை அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இவ்வாறு அறிவிக்கப்படும் தேர்வுத் தேதி 30 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.