ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் முழுவதும் மின்னணு மயமாக்கப்பட்டு நேற்று முதல் காகிதமற்ற உயர்நீதிமன்றம் ஆகி உள்ளது.

தற்போது கொரோனா தொற்று காரணமாகப் பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.  கொரோனா வைரஸ் காகிதம் மூலம் பரவும் என்பதால் பல வங்கிகள் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது.   ஏற்கனவே மின்னணு முறையில் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஜூலை,மாதம் 18 ஆம் தேதி அன்று முதல்முறையாக வழக்கு நடந்துள்ளது.

உச்சநீதிமன்றம் காகித வடிவாக உள்ள ஆவணங்கள் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என ஏற்கனவே கூறி உள்ளது.  அனைத்து ஆவணங்களையும் மின்னணு முறையில் சேமிப்பதை உச்சநீதிமன்றம் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தொடங்கி உள்ளது.   உச்சநீதிமன்றத்தில் இதை வழக்கு முழுமைக்கும் கொண்டு வருவது குறித்துப் பார் அசோசியேஷன் உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற அனைத்து வழக்குகளின் அத்தனை நடவடிக்கைகளும் மின்னணு முறையில் தொடங்கப்பட்டுள்ளது   நேற்று காணொளி வழக்காக நடந்த 10 மனுக்களிலும் தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் மற்றும் சுஜித் நாராயண் ஆகியோரின் அமர்வு காகிதத்தை முழுவதுமாக பயன்படுத்தவில்லை   இந்த 10 மனுக்களில் இரு வழக்குகளுக்குத் தீர்ப்பும் நேற்று வழங்கப்பட்டுள்ளது.