துபாய்
உலகின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்களில் 30000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் சமீபத்தில் கொரோனாவால் 70 சதவீதம் உலகின் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், விமான நிலையங்களில் வணிகம் செய்பவர்களுக்கு ரூ.5,000 – 5,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தது. அதிலும் குறிப்பாகப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் 314 பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதுமுள்ள விமானச்சேவை நிறுவனங்களில் மொத்தம் 29 லட்சம் ஊழியர்கள் வரை வேலையிழப்புக்கு ஆளாவார்கள் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனமும் போக்குவரத்து முடக்கத்தால் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. இதையொட்டி எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்களின் ஊதியத்தை 25% வரை குறைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
தற்போது இந்த நிறுவனத்தில் சுமார் 1,05,000 பேர் பணி புரிந்து வருகின்றனர். இதில் 30% அதாவது சுமார் 30,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் எனத் தகவல்கள் வந்துள்ளன. இது உலக மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை எமிரேட்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது
அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும் தற்போதுள்ள நிலையில் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.