கேரளாவில் கட்டணத்தை உயர்த்தி பஸ் போக்குவரத்துக்கு அனுமதி..
நான்காம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மாநிலங்களே கட்டுப்பாடுகளை, இஷ்டம் போல் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான நடைமுறைகளை பின் பற்றி நான்காம் கட்ட ஊரடங்கைச் செயல்படுத்த உள்ளன.
கேரளாவில் ‘ திறந்திருக்கும்.. ஆனால் திறந்திருக்காது’’ என்ற ரீதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மதுக்கடைகள் திறந்திருக்கும். ஆனால் முன் கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும். பார்சல் மட்டுமே.
சலூன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முடி வெட்டிக்கொள்ளலாம். ஷேவிங் செய்து கொள்ளலாம். வேறு எதற்கும் அனுமதி இல்லை.
டவலை ஒரு முறை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்கள், வீட்டில் இருந்தே ‘டவல்’ கொண்டு வந்தால், ’’தேவலை’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் முன் கூட்டியே ‘அப்பாயிண்ட்மெண்ட்’ பெற்றிருந்தால் உசிதம்.
காலை 7 முதல் மாலை 7 மணி வரை பஸ் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்துள்ள கேரள அரசாங்கம், பேருந்து கட்டணத்தை 50 % அதிகரித்து உள்ளது.
இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்லலாம்,, ஆட்டோவிலும் ஒருவர் மட்டுமே பயணிக்கலாம்,என்பன போன்ற ’’சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
– ஏழுமலை வெங்கடேசன்