வாஷிங்டன்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த ஒரு வாரமாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுவின் தொடர்ந்து உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 15.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 92 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவை தடுக்க அமெரிக்கா கடும் முயற்சி எடுத்து வருகிறது. தினமும் வெள்ளை மாளிகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிபர் டிரம்ப் செய்தியாளர்களா சந்தித்து வருகிறார்.
அப்போது டிரம்ப், “நான் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நான் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன். இந்த மருந்தை வெள்ளை மாளிகை மருத்துவர் பரிந்துரைக்கவில்லை. நான் அவரிடம் இது குறித்து கருத்துக்கேட்டபோது அவர் நான் விரும்பினால் எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். நான் தினம் ஒரு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.
மக்களில் சிலர் நான் இந்த மருந்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பதால் எனக்கு மருந்து நிறுவனம் சொந்தமானதாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் அந்த நிறுவனம் எனக்குச் சொந்தமானது. இல்லை. எனது நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் இருக்க நான் விரும்புகிறேனே தவிர உடல் நலக்குறைவுடன் இருக்க நான் விரும்பவில்லை.
இந்த மருந்துகள் ஆரம்பக்கட்டத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை ஆகும். இந்த மருந்தை கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பலர் எற்கனவே உண்டு வருகின்றனர். அவர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். நான் தற்போது தினமும் இந்த மாத்திரையை உட்கொண்ட போதிலும் ஒரு கட்டத்தில் நிறுத்தி விடுவேன்” எனத்தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை மருத்துவர்கள் அளித்துள்ள அறிக்கையின்படி டிரம்ப் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு கொரோனா சோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவருக்கு இதுவரை பாதிப்பு இல்லை எனவே முடிவுகள் வந்துள்ளதாகவும் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.