டில்லி
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிவாரண உதவிகளில் உள்ள அம்சங்கள் குறித்து வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் கோரி அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி பல முறை வங்கி நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் நடத்திய கூட்டங்களில் முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போதும் வங்கி ஊழியர்கள் சுழற்சி முறையில் பணி புரிந்து வந்தனர். வங்கி நடவடிக்கைகளில் எவ்வித முடக்கமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண திட்டங்களை ஐந்து கட்டங்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்களில் வங்கி ஊழியர் ஊதிய திருத்தம் மற்றும் சலுகைகள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இது குறித்து வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலர் சவுமிய தத்தா, “வங்கி என்பது பொருளாதாரத்தின் அச்சாணி போன்றதாகும். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் வங்கிகள் முழு ஒத்துழைப்பை அளித்தும் அரசு அதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. வங்கி ஊழியர்களின் சேவை குறித்தோ, அவர்களின் கோரிக்கைகள் குறித்தோ நிதி அமைச்சர் ஒன்றுமே சொல்லவில்லை. சரியான நேரத்தில் நடத்தப்படாத பொதுத் துறை வங்கிகள் இணைப்பு வங்கி ஊழியர்களுக்கு ஏற்கனவே ஒரு ஊக்கமின்மையை அளித்துள்ளது.
இதைப் போல் நிதி அமைச்சர் அறிவித்த தனியார் மயமாக்கல், கடன் உதவிகள், திவால் சட்டத் திருத்தம் உள்ளிட்டவையும் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. தனியார் மயமாக்கல் என்பது தவறான நடவடிக்கையாகும். அதைப் போல் தற்போது வாராக்கடன்கள் 10 லட்சம் கோடியை எட்டி உள்ள நிலையில் அதைத் திரும்பப் பெற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிதி அமைச்சர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடியில் இதுவே பாதிப் பங்கு நிதியை அளித்திருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலம் ஏற்கனவே வங்கி நிர்வாகம் ஊழியர்கள் சங்கங்களுடன் நடந்த பேச்சு வார்த்தைகளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய நிலையில் அதைத் தொடர வற்புறுத்தவில்லை எனவும் தெரிவித்தார். அதே வேளையில் இது குறித்த எவ்வித அறிவிப்பையும் கூட நிதி அமைச்சர் வெளியிடாதது மிகவும் வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.