சென்னை

ரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழக கோவில்களைத் திறந்து ஆன்லைன் மூலமாக இ பாஸ் மூலம் தரிசிக்க அனுமதி வழங்குவது குறித்து அறநிலையத்துறை பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா பரவுதல் அதிகமானதில் இருந்து ஒரே இடத்தில் பலர் கூடுவதைத் தடுக்க கோவில்களுக்குப் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது.   தற்போது தமிழகத்தில் மே மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஒரு சில இடங்களில் ஊரடங்கு விதிகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளன.  ஆயினும் கோவில்களுக்குப் பக்தர்கள் வர அனுமதி அளிக்கப்படவில்லை.

இது குறித்து அறநிலையத் துறை ஆணையர் பனிந்திர ரெட்டி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்துள்ளது.  இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்பட்டு சமுக இடைவெளி விதிகளுடன் தரிசனம் செய்யப் பக்தர்களை அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.   இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரையாக அனுப்பி உள்ளார்.

அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர், “இந்த கூட்டத்தில் வரும் ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு  கட்டுப்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க அரசிடம் அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டது.  கோவில்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.    இதன்படி முக்கிய கோவில்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்வோரில் தினம் 500  பேருக்கு இ பாஸ் அளிக்கப்பட்டு கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் எனக் கூறப்பட்டது.  இந்த இ பாசில் குறிப்பிட்ட நேரத்தில்  மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும்.  இந்த நிலை கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும் வரை தொடரும்“ எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.