லண்டன்: கொரோனா நோயாளிகளை நாயின் மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் திட்டத்தின் பரிசோதனை முயற்சிகளை பிரிட்டன் தொடங்கி இருக்கிறது.
பிரிட்டனின்மில்டல் கெய்னஸ் நகரில் உள்ள நாய்கள் காப்பகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா நோயாளியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்த பயிற்சி, நடத்தி முடிக்கப்பட்டது. துர்ஹாம் பல்கலைக்கழகம், மெடிக்கல் டிடெக்ஸன் டாக் அமைப்பு ஆகியவற்றுடன் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராபிகல் மெடிசன் இணைந்து இந்தப் பரிசோதனையை தொடங்கியுள்ளது.
அதற்காக பிரிட்டன் அரசு சார்பில் 4.59 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து பிரிட்டனின் புத்தாக்கத்துக்கான அமைச்சர் லார்ட் பெத்தல் கூறுகையில், முன்னதாக மெடிக்கல் டிடெக்ஸன் நாய்கள் பல்வேறு நோய்களை கண்டுபிடித்துள்ளன என்பதால் இப்போது கொரோனா தொற்றுக்கும் பயன்படுத்துகிறோம்.
இந்த பரிசோதனையில் துல்லியம் மிகவும் முக்கியம். லேப்ரடார் வகை நாய்கள், காக்கர் ஸ்பானியல்ஸ் வகை நாய்கள் என மொத்தம் 6 நாய்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான பயிற்சி முடிந்தபின், கொரோனா அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கூட நாய்களால் கண்டறிய முடியும் என்றார்.
பரிசோதனைக்காக லண்டன் சுகாதாரத்துறையினர், கொரோனா நோயாளிகளின் உடலில் இருந்து வியர்வை வாசத்தின் மாதிரிகளையும், கொரோனா பாதிக்கப்படாதவர்கள் வியர்வை மாதிரிகளையும் சேகரித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.