சென்னை: கொரோனா பாதிப்புகள் குறைகிறது என்பதை காட்டுவதற்காக பரிசோதனை விவகாரத்தில் தமிழக அரசு பொய்க்கணக்கு எழுதுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால், பூலோகம் இருண்டு போகுமோ?’ – என்றொரு சொலவடை உண்டு. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அரசும் அப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது.
கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாக, நோய்த் தொற்று குறைந்து வருகிறது அல்லது நோய்த்தொற்றே இல்லை என்று போலியாக வெளி உலகத்திற்குக் காட்ட நினைக்கிறது தமிழக அரசு.
தமிழகத்தில் மே 7-ம் தேதி 14,102 என்ற அளவில் இருந்த பரிசோதனைகளின் அளவானது, படிப்படியாகக் குறைக்கப்பட்டு நேற்றைய (16.5.2020) தகவலின் படி, 8,270 எனக் குறைந்துள்ளது. பரிசோதனை செய்யும் அளவை அரசு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைத்துள்ளது. அதனால் நோய்த் தொற்று எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் காட்டுகிறார்கள்.
பரிசோதனைகளைப் பரவலாக அதிகப்படுத்திய பிறகும், நோய்த் தொற்று இல்லை என்று நிரூபிப்பதுதான் நேர்மையான அரசாங்கத்தின் நெறியாக இருக்க முடியுமே தவிர; பரிசோதனையே செய்யாமல் நோயே இல்லை என்று காட்ட முயற்சி செய்வது, விபரீதத்தையே விளைவிக்கும். சாதனை அல்ல; வேதனையே!
மரபணு மாற்றத்துக்குட்படும் கொரோனா வைரஸ் புதிய வடிவில் மீண்டும் தாக்குதலைத் துவங்கும் என்றும், கனமழை காரணமாகவும் நோய் பரவும் விகிதம் கூடும் என்றும் சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனையும் மீறி பரிசோதனைகளைக் குறைப்பது எவ்வளவு அபத்தமானது; ஆபத்தானது என்பதைத் தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பரிசோதனைகள் செய்யாமல் கொரோனா நோய்ப் பரவல் இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது; விளக்கைப் பிடித்துக்கொண்டு ஆழமான கிணற்றில் இறங்குவதைப் போன்றது. ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன்.
பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். மாவட்ட வாரியாக தினந்தோறும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒளிவு மறைவின்றி வெளியிடுங்கள். அதன்மூலம் நோய்ப்பரவல் இல்லை என்பதை நிரூபியுங்கள் என்று கூறி இருக்கிறார்.