ஜெய்ப்பூர்
கொரோனா பாதிப்பினால் அவதிப்படும் விவசாயிகள் நலனுக்காக ராஜஸ்தான் அரசு விளை பொருள் அடமானக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
கொரோனாவால் இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களில் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்றாகும். அம்மாநிலத்தில் இதுவரை 4960 பேர் பாதிக்கப்பட்டு அதில் 126 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2944 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ராஜஸ்தான் மாநிலமும் கடும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலாத் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொருளாதார நெருக்கடியில் உள்ள விவசாயிகள் நலனுக்காக விவசாயப் பொருட்களுக்குச் சரியான விலை அளிக்கப்படும் என அரசு உறுதி அளிக்கிறது. அவர்களுக்கு விவசாயச் செலவுக்காக பயிர் அடமானக் கடனை 3% வட்டியில் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முன்பு 10% வட்டியில் வழங்கப்பட்ட பயிர் அடமானக் கடனில் 2% வட்டியை அரசு ஏற்றுக் கொண்டு இருந்தது. தற்போது அரசு 7% வட்டியை ஏற்றுக் கொண்டு விவசாயிகள் 3% மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்படுகிறது. இதற்காக அரசு ஆண்டு தோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. இந்த பயிர்க்கடனுக்கான 75 வட்டியை அரசு அந்த நிதியில் இருந்து செலுத்தும்
இந்த புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகளில் விளை பொருட்களின் மதிப்பு சந்தை விலை அல்லது ஆதார விலையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். அதில் 70% அளவுக்குக் கடன் வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலும் பெரிய விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் 3% வட்டியில் கடன் வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
இந்தக் கடன் 90 நாட்களில் திரும்பச் செலுத்தும் வகையில் அளிக்கப்படும் சூழலைப் பொறுத்து கடன் கால கட்டம் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும். குறித்த காலத்துக்குள் கடனை செலுத்துவோருக்கு வட்டித் தொகையில் ஒரு பகுதி அன்பளிப்பாக வழங்கப்படும். தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 11% வட்டிக் கடன் இனி 3% வட்டிக் கடனாக மாற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.