மிசோராம்:
மிசோராம் அரசின் கோரிக்கையை ஏற்று தேவாலயங்களில் உள்ள அரங்குகளை கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்திக்கொள்ள மிசோரம் மாநில தேவாலயங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மே 17 வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பல தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. மே 17-ஆம் தேதிக்குப் பின்னரும் பொது முடக்கம் தொடரும் என்றும், அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோரிடம் பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பாக நேற்று ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் அனைவரும் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்ததால், தற்போது பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சில தளர்வுகளுடன் இந்தப் பொது முடக்கம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிசோராம் தேவாலயங்களில் உள்ள அரங்குகளை கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்திக்கொள்ள மாநில அரசு தேவாலயங்களிடம் அனுமதி கோரியிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட தேவாலயங்கள் அனுமதி வழங்கி இருப்பதாகவும், அங்கு தங்கவைக்கப்படுபவர்களுக்கு சொந்த செலவில் உணவு வழங்க சில தேவாலயங்கள் முன்வந்திருப்பதாகவும், மிசோரம் அரசு தகவல் தெரிவித்துள்ளது.