சென்னை
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கான புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் இருந்து சென்ற பலர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கி உள்ளனர். பயணத் தடை காரணமாக அவர்களால் சொந்த ஊருக்கு வர இயலவில்லை. சமீபத்தில் இவர்களை மீண்டும் தமிழகம் அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. இதற்காகத் தமிழக அரசு ஒரு இணைய தளத்தை உருவாக்கி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இந்த இணைய தளம் மூலம் இ பாஸ் பெற முடியும். இந்த தளத்தில் ஆதார எண், அடையாள் அட்டை விவரம் மற்றும் பயணம் செய்ய உள்ள வாகனம் ஆகியவற்றின் விவரங்களை அறிவிக்க வேண்டும். ஒரே முறையில் ஓட்டுநர் தவிர 30 பயணிகளின் விவரங்களைப் பதிவு செய்து இ பாஸ் பெற முடியும்
மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருவோர் என அனைவருக்கும் புதிய விதிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்வோர்,
தமிழகத்துக்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குப் பயணம் செய்வோருக்கு அதிக ஜுரம், ஜலதோஷம், இருமல் போன்ற கோவிட் 19 அறிகுறிகள் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். பாதிப்பு உறுதி ஆகாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆயினும் வேறு மாவட்டத்தில் இருந்து வருவோர் அவசியம் வீட்டுக்குள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
வெளி மாநிலத்தில் இருந்து வருவோர்
வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வது கட்டாயமாகும். அவர்களுக்குப் பாதிப்பு உள்ளது உறுதி செய்யபபட்ட்டால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
கொரோனா பாதிப்பு உறுதி ஆகாதோர் டில்லி, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வந்திருந்தால் அரசின் தனிமை விடுதியில் 7 நாட்களுக்கு தங்கி இருக்க வேண்டும். 7 நாட்களுக்குள் கொரோனா அறிகுறிகள் தென்படாவிடில் அவர்கள் வீட்டுக்குச் சென்று வீட்டுத் தனிமையில் 7 நாட்கள் இருக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.
டில்லி, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகவில்லை என்றால் வீட்டுத் தனிமையில் 14 நாட்கள் இருக்க வேண்டும்.
இந்த பயணிகளின் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இல்லை எனில் அரசின் தனிமை விடுதி வசதிகளை பெற்றுக் கொள்ள அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
வெளி நாடுகளில் இருந்து வருவோர்
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். பாதிப்பு உறுதியானோருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
பாதிப்பு உறுதி ஆகாதோர் 7நாட்களுக்கு அரசு தனிமை விடுதிகள் அல்லது ஓட்டல்களில் தனிமைப்படுத்த படுவார்கள். 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை நடைபெறும். அதில் பாதிப்பு உறுதி ஆனால் அவர்கள் மருத்துவமனைகலுக்கு மாற்றப்படுவார்கள், பாதிப்பு உறுதி ஆகாதோர் வீட்டுக்கு அனுபபபட்டு மேலும் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்படாவிட்டாலும் அவர்கள் குறைந்தது 21 நாட்கள் தனிமையில் இருந்தாக வேண்டும்.
விதி விலக்கு அளிக்கப்படும் சிறப்புப் பிரிவினர்
தமிழக அரசு நன்கு வகை பயணிகளுக்கு அரசு தனிமை விடுதிகளில் தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. அவர்கள் வீட்டு தனிமை அல்லது மருத்துவ தனிமையை அவர்கள் விருப்பம் போல் தேர்வு செய்யலாம், அது மட்டுமின்றி அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் உறுதி ஆன பிறகு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறலாம்
அந்த நான்கு சிறப்பு பிரிவினர் விவரம் வருமாறு
- மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை தேவைப்படுவோர்,
- கர்ப்பிணி பெண்கள்
- குடும்ப உறுப்பினர் மரணம் காரணமாக உடனடியாக ஈமச் சடங்கு, கருமாதி போன்றவற்றில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்,
- 75 வயதைத் தாண்டியோர் மற்றும் மற்றவர் உதவியுடன் வாழும் முதியோர்