ஆந்திரா பிரதேசம்:
மும்பையில் இருந்து ஆந்திராவுக்கு திரும்பிய 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தானேவிலிருந்து சிறப்பு ரயிலில் மூலம் ஆந்திராவுக்கு 930 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆந்திரா வந்துள்ளனர். இந்த 930 பேரில் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கடப்பாவைச் சேர்ந்தவர், மீதமுள்ள 37 நோயாளிகள் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் மும்பையின் மஸ்ஜித் பண்டர் பகுதியில் உள்ள ஒரு மீன் சந்தையில் வேலை செய்து வந்தவர்கள் என்றும், கடந்த செவ்வாயன்று பதிவான 33 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையுடன் தொடர்பு உடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
ஆந்திராவில் கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா பாதிப்புக்கு உள்ளான 33 பேரில், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 10 பேர், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 9 பேர், கிழக்கு கோதாவரியை சேர்ந்த ஒருவர் என்றும் தெரிய வந்துள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள கோயம்பேடுக்கு வந்து சென்றவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அதேபோல், நெல்லூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 9 கொரோனா நோயாளிகளும் கோயம்பேடு வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.