மிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கடந்த 5ந்தேதி கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான சுமார் 100ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்தை 11ந்தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை மாநகரத்திலும் புற நகர்ப் பகுதிகளிலும் வசிக்கும் கிட்டத்தட்ட 1 கோடி மக்களின் காய்கறி தேவைகளை நிறைவு செய்து வந்த கோயம்பேடு சந்தையை கைப்பற்ற தமிழகஅரசு முயற்சிப்பதாக அதிகார மட்டத்தில் இருந்து  தகவல்கள்  பரவி வருகின்றன.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த மக்கள் தொகை கூட்டத்தைத் தொடர்ந்தே,  பாரிமுனை பகுதியில்  செயல்பட்டு வந்த கொத்தவால் சாவடி சந்தை மூடப்பட்டு, 1996ம் ஆண்டு கோயம்பேட்டில் கட்டப்பட்ட புதிய சந்தைக்கு மாற்றப்பட்டது.

சுமார் 295 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் கோயம்பேடு சந்தையில் 3 ஆயிரத்து 941 கடைகள்  உள்ளன.  பல்வேறு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த சந்தையில், 2 பிளாக்கு களில் காய்கறியும், ஒரு பிளாக்கில்  பழங்கள் மற்றும் மலர்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்த சந்தையை நம்பி ஆயிரக்கணக்கான வணிகர்கள் வியாபாரம்  வந்த நிலையில்,  சாதாரண நாள்களில் குறைந்த பட்சம்  5 ஆயிரம் டன் காய்கறி மற்றும் பழங்கள்  விற்பனையாகும், இதன் மூலம்  நாள் ஒன்றுக்கு 30 முதல் 35 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது.
சென்னை மற்றும் புறநகர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பொது மக்களும் கோயம்பேடுக்கு வந்து தேவையானவற்றை வாங்கிச் செல்வர்.   இப்படி ஆயிரக்கணக்கானோரின் வருவாய் ஆதாரமாகத் திகழ்ந்த கோயம்பேடு சந்தையை கொரோனா வைரஸ் முடக்கி போட்டுள்ளது.
சென்னை மற்றும் அண்டை மாவட்ட மக்களின் உணவு தேவைகளுக்காக தன்னையே தாரை வார்த்த கோயம்பேடு சந்தை  தற்போது ஆட்கள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது..
ஆனால், இந்த முடக்கத்தை தமிழகஅரசு நிரந்தர முடக்கமாக்க பிளான் போட்டுள்ளதாக கோட்டை வட்டாரத்  தகவல்கள் கசிந்துள்ளன. இந்த விவகாரத்தில் அரசியல் சதுரங்கம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 295 பரப்பளவிலும், நகரத்தின் மையப்பகுதியிலும் அமைந்துள்ள கோயம்பேடு சந்தை அமைந்துள்ள இடம் இன்றைய மதிப்பீட்டில்  ஆயிரம் கோடிகளுக்கு மேலான ரூபாய் மதிப்புடையது.
இவ்வளவு பெரிய, விஸ்தாரமான இடத்தை, அரசு கைப்பற்றினால் என்ன என ஆட்சியாளர்களி டையே ஆசை கொளுந்துவிட்டு எரிவதாக கூறப்படுகிறது.

தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள், வாகனங்கள் கோயம்பேடு சந்தைக்கு வருவதை காரணம் காட்டி, சிட்டில் கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்படுவதாக கூறி, ‘கோயம்பேடு சந்தையை கைப்பற்ற தமிழகஅரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய கொரோனா  முடக்கத்தை நிரந்தரமாக்கி, அந்த இடத்தை  அரசு கைப்பற்ற திட்டமிட்டு வருவதாகவும்,   அந்த இடத்தை மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு அதிக வருவாய் வரும்  நிறுவனங்களுக்கு தாரைவார்த்தால்  அரசுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும், அதே வேளையில்  ஆட்சியாளர்களும் புறவாசல் வழியாக கோடிக்கணக்கான ரூபாயை அள்ள முடியும் என கணக்குப்போட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற சதுரங்க வேட்டையில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு, கொரோனா பெயரில் முடக்கப்பட்டுள்ள கோயம்பேடு சந்தையை நிரந்தரமாக முடக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோயம்பேடு சந்தை  இனிமேல் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

‘தமிழகஅரசு, கோயம்பேடு சந்தையை கையகப்படுத்தும் நோக்கில்தான் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை உருவாக்கி இருப்பதாக வும், அதுவே நிரந்தர சந்தையாக மாறும் என்று அதிகார மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோயம்பேடு மார்க்கெட் போலவே, தற்போது திருமழிசையிலும், 4 பிரிவுகளாக கடைகள் பிரிக்கப்பட்டு உள்ளன.  இதன்படி, ஏ பிரிவில் 58 கடைகள், பி பிரிவில் 31 கடைகள், சி பிரிவில் 60 கடைகள், டி பிரிவில் 51 கடைகள் என விற்பனை நடந்து வருகிறது.
தினசரி ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட லாரிகள் வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கழிப்பிட வசதிகள், தண்ணீர் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
இதனால் திருமழிசைதான் புதிய கோயம்பேடு மார்க்கெட் என்று கூறப்படுகிறது.