டெல்லி :
‘ஆரோக்ய சேது‘ நாடு முழுக்க 9 கோடியே 80 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ள இந்த செயலி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த செயலியின் தரவுகளை திருடவோ தவறாகவோ பயன்படுத்தினால் சிறை தண்டனை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.
தனிநபர்கள் தரவு பாதுகாப்பு குறித்து எந்தவொரு சட்டமும் இல்லாத நிலையில், அரசு ‘ஆரோக்ய சேது’ செயலியை நாடுமுழுவதிலும் உள்ள மக்களை கண்காணிக்க பெருமளவு பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது, தரவு பாதுகாப்பு குறித்து பல குற்றசாட்டுகளை எழுப்பியுள்ளது.
சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களும், ஆரோக்ய சேது செயலியின் தரவு பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், ‘ஆரோக்ய சேது’ செயலியின் தரவுகளை தவறாக பயன்படுத்துவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 இன் பிரிவு 51 முதல் 60 வரை மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மின்னணு அமைச்சக மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆரோக்ய சேது பயன்பாட்டை இன்றுவரை 9.8 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் அருகில் நெருங்கி வந்தால் இந்த செயலியை பயன்படுத்தும் பயனர்களை இது எச்சரிக்கிறது.
ஆரோக்ய சேது செயலியை இதுவரை தரவிறக்கம் செய்தவர்களில், 1.4 லட்சம் பேருக்கு இந்த செயலி உதவியுடன் பாதிக்க பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் வரும்போது எச்சரிக்கப்பட்டனர். மேலும், இந்த செயலியை பயன்படுத்தி சுமார் 13,000 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசு துறைகள் இந்த தரவைக் கையாளுவதற்கான நடைமுறைகளை இந்த அறிவிப்பில் தெளிவு படுத்தியிருக்கின்றனர். பாதிக்கப்படாத நபரின் தரவு ஆரோக்ய சேது பயன்பாட்டில் இருந்து 30 நாட்களிலும், பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 45 நாட்களிலும், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் 60 நாட்களிலும் தங்கள் தரவை இந்த செயலியின் பதிவிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பை பயனருக்கு வழங்கி இருக்கிறது.
புதிய வழிகாட்டுதல்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் புள்ளிவிவரங்கள், தொடர்பு விவரங்கள், சுய விவரங்கள் மற்றும் இருப்பிடத் தரவை மட்டுமே சேகரிக்க அனுமதிக்கின்றன. இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களை அடையாளம் காணக்கூடிய விவரங்களை நீக்கிய பின்னரே ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பல்கலைக்கழகங்களுடன் தரவைப் பகிர முடியும்.
ஆரோக்கிய சேது பயனர்களின் தரவு பல்வேறு துறைகளின் முக்கிய செயல்பாட்டுக்கு தேவை உள்ளதால், தனிநபர்களின் பாதுகாப்புக்கு இந்த செயலியின் பயன்பாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று திரு சாவ்னி கூறினார்.