சென்னையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், சர்வ சாதாரணமாக சொந்த ஊர்களுக்கு படகில் தப்பி ஓடுவது சகஜமாகி விட்டது.
ஏற்கனவே மூன்று வெவ்வேறு தருணங்களில் சென்னை வாழ் மீனவர்கள், படகை விலைக்கு வாங்கி, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் உள்ள தங்கள் ஊர்களுக்கு சென்று விட்டனர்.
கடலில் பல நாட்கள் பயணம் செய்தும் அவர்கள் , நேவி கண்ணிலோ, கடலோர காவல் படை கண்ணிலோ படவில்லை என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து கடந்த 6 ஆம் தேதி ‘’கள்ளத்தோணியில்’’ புறப்பட்ட 42 மீனவர்கள் ஒடிசாவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு பத்திரமாய் போய் சேர்ந்துள்ளனர்.
ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு படகு ஒன்றை விலைக்கு வாங்கிய மீனவர்கள், கடலில் சிட்டாய் பறந்து நேற்று இரவு ஒடிசாவின் கஞ்சம் மாவட்ட எல்லையை அடைந்தனர்.
அவர்களை கடற்படை பிடிக்காவிட்டாலும், அங்குள்ள போலீஸ்படை பிடித்து விட்டது.
அனைவரும் அங்குள்ள முகாமில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.