சென்னை:

திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் பணி வரும் சனிக்கிழமை முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக மூடப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மாற்றாக திருமழிசையில் தற்காலிக சந்தை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தையானது நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவரும் திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் பணி வரும் சனிக்கிழமை முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோபாலிட்டன் மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கையில், திருமழிசை மார்க்கெட்டில் அமைக்கப்பட உள்ள ஒவ்வொரு கடையும் 400 சதுர அடி முதல் 500 சதுர அடி கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு கடையின் முன்புறமும் 200 சதுர அடி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் இந்த மார்க்கெட்டை ஆய்வு செய்த பின்னர், பேசிய மார்க்கெட் மேலாணமை கமிட்டியின் முன்னாள் தலைவரும், வெங்காய வியாபாரியுமான வி.ஆர் சவுந்திரராஜன் தெரிவிக்கையில், அரசு 450 மொத்த வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கியுள்ளது. கோயம்பேட்டில் 250 கடைகள் மொத்த வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்றார். ஆனால் நாங்கள் கோயம்பேட்டில் உள்ளது போன்று 600 சதுர அடி முதல் 2,400 சதுர அடி அளவு கொண்டதாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொரோனா தொற்று அதிகம் பரவிய நிலையில், கோயம்பேடு சந்தை கடந்த மே 5 ஆம் தேதி மூடப்பட்டு தற்காலிக சந்தை திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.