டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர்.

நாகபட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான ECE பட்டதாரி கார்த்திக், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டத்தில் நெருக்கியடித்து வரிசையில் நின்று சரக்கு வாங்குவதால் கொரோனா வெகு எளிதாகத் தொற்றிக்கொள்ளும் ஆபத்து என்று உணர்ந்து இதற்கென ஒரு பிரத்தியேக ரோபோவை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

தற்போது கோவையில் வசித்து வரும் இவரின் ரோபோ வெரைட்டி ஹால் சாலையிலுள்ள  ஒரு டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று சரக்கு வாங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“ஒரு மணி நேரம் ஆச்சு என் ரோபோ சரக்கு வாங்கிட்டு வீட்டுக்கு வரதுக்கு” என்று சிரிக்கிறார் கார்த்திக்.

“முதல் நாள் நான் பார்த்த கட்டுக்கடங்கா கூட்டம் என்னைக் கொஞ்சம் யோசிக்க வெச்சது.  உடனே தயாரிப்பில் இறங்கிட்டேன்.  பசங்க ஓட்ற சைக்கிள் சக்கரம் நாலை யூஸ் பண்ணி ஒரு கியரோட, சென்சார் மாதிரியானவைகளை சேர்த்து என் மொபைலோட கனெக்ட் பண்ணி இந்த ரோபோவை மூவாயிரம் ரூபாய் செலவில் உருவாக்கிட்டேன்” என்று விவரிக்கிறார்.

இந்த ரோபோவை எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபரேட் செய்து கொள்ளலாம்.  வரிசையில் நின்ற இந்த ரோபோ டாஸ்மாக் கடையை அடைந்ததும் அங்கிருந்த ஊழியர் எடுத்து வைத்த மது வகைகளிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்து, அதற்கான தொகையை  டிரான்ஸ்பர் செய்து வெற்றிகரமாகக் கொள்முதலை முடித்துச் சென்றுள்ளது.  இவையனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றுள்ளது.  இத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் கேமராவாகவும், சென்சாராகவும் டபுள் டியூட்டி பார்க்கிறது என்பது கூடுதல் தகவல்.

“வெளிநாடுகளில் சுகாதாரத் துறையில் இது போன்ற ரோபோக்களின் பங்களிப்பு மிக அதிகம்.  இந்த ரோபோவை மருத்துவ மற்றும் சுகாதார பணிகளில் பயன்படுத்துவது கொரோனா தொற்றைத் தடுக்க பெரிதும் உதவும்” என்று விவரிக்கிறார் கார்த்திக்.

பள்ளிக்குழந்தைகளை டிராக் செய்யும் கருவி, காரில் சீட் பெல்ட் போட சொல்லும் அலாரம், எந்த தொடுதலும் இன்றி சென்சார் மூலமாகவே ஏடிஎம் மெசினிலிருந்து பணம் எடுக்கும் கருவி என்று இவரின் கண்டுபிடிப்புக்களின் லிஸ்ட் அதிகம்.

இவர்களைப் போன்றவர்களுக்குச் சரியான ஊக்கத்தினை அளித்து இதைப் போல நிறையக் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணருவது அரசின் கடமையாகும்.

– லெட்சுமி பிரியா