வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில், ஒரு விநோதமான மற்றும் மிக மிக மோசமான ஒரு காலக்கட்டத்தை இந்தியா கடந்து கொண்டுள்ளது.
இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மீது பல்வேறான விமர்சனங்கள் எழுகின்றன. அவர், பாலகோட் சம்பவத்தையொட்டி மேற்கொண்ட ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரக்கைப் போன்று இப்போது ஏதேனும் செய்து நிலைமையை சரிசெய்துவிட மாட்டாரா? என்றும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
விளக்கு ஏற்றுதல் மற்றும் மலர் தூவி போற்றுதல் உள்ளிட்ட செயல்களெல்லாம் நிலைமையை சமாளிக்க உதவாது. மலர்தூவி வாழ்த்து தெரிவிப்பதற்கு இதுவொன்றும் போர் வெற்றி அல்ல. இப்போது வழக்கமான போரும் நடைபெறவில்லை.
நாம், தற்போது சீன வைரஸ் என்ற ஒரு முன்பின் அறியாத வைரஸுடன் போரிட்டுக் கொண்டுள்ளோம். இந்த வைரஸ் நமது பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதுடன், பலகோடி மக்களையும் வேலையிழக்கச் செய்துள்ளது.
மோடி அரசின் வைக்கப்படும் ஒரு பெரிய மற்றும் முக்கியமான விமர்சனம் என்னவெனில், தற்போது கடுமையான நிதி முடக்கத்தில் சிக்கியிருக்கும் மாநில அரசுகளுக்கு தரவேண்டிய போதுமான அளவு நிதியை தராமல் இழுத்தடிக்கிறது என்பது. ஏனெனில், மாநில அரசுகள் தங்களுக்காக தாங்களே ஈட்டிக்கொள்ளத்தக்க வருவாயில் சுமார் 30% முதல் 40% ஐ உள்ளடக்கும் மது விற்பனை மற்றும் அத்தியாவசியமற்ற மின்வணிக நடவடிக்கைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
மாநில அரசுகளுக்கு நியாயமாக செய்ய வேண்டிய எந்த நிதி நிவாரண நடவடிக்கைகளும் மத்திய அரசால் செய்யப்படவில்லை என்ற விமர்சனம் உண்மைதான் என்பதற்கு வெளிப்படையான சில அம்சங்கள் புலப்படவே செய்கின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வணிக நிறுவனங்கள் தரக்கூடிய நன்கொடைகள், பிரதமர் நிவாரண நிதிக்கு தரப்பட்டால் மட்டுமே, அது சிஎஸ்ஆர் சேவையின் கீழ் வகைப்படுத்தப்படும் என்றதொரு அறிவிப்பே அதற்கான மிகப்பெரியதொரு உதாரணம்.
கொரோனா பரிசோதனை நாளுக்குநாள் அதிகரிக்கப்பட்டு வருவது ஒரு சாதகமான அம்சமாக இருக்கிறது. இந்நிலையில், ஒருசாரார், ஊரடங்கு நடைமுறையை மோடி அரசு நீட்டிக்க வேண்டுமென கோரும் அதேநேரத்தில், பொருளாதார நடவடிக்கைகளை மிகவிரைவில் திறந்துவிட வேண்டுமென்ற கோரிக்கையும் இன்னொரு தரப்பிலிருந்து எழுகின்றன.
ஒரு சலூன் கடை எங்கே திறந்திருக்க வேண்டும் என்று முடிவுசெய்யும் அதிகாரத்தைக்கூட மோடி தன்னிடமே வைத்திருக்கிறார் என்ற அந்த தரப்பார் விமர்சிப்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
அதேசமயம், இரண்டு தரப்புகளும் ஒரு விஷயத்தில் ஒன்றுபடுகின்றன. உள்நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, முதல் கட்டத்திலேயே முறையான வகையில் ஊர்திரும்புவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யாத செயலற்ற தன்மையில் இருதரப்பாருமே குற்றம் சுமத்துகின்றனர்.
அந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள், தேசிய ஊரடங்கால் அடைகின்ற வேதனை சொல்லவொண்ணா வகையில் இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் மாநில அரசின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவுகூட சரியாக வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் உண்டு.
அவர்கள், சிறப்பு ரயில்களில் ஊர் திரும்ப செய்யப்பட்ட ஏற்பாட்டில்கூட, ரயில்வே கட்டணம், ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் மாநில அரசுகளின் மீது சுமத்தப்பட்டது. ஆனால், ரயில்வே துறை சார்பில் வழங்கப்பட்ட நிதியை தனது பிரதமர் நிவாரண நிதித் திட்டத்தில் பெற்றுக்கொண்டது மத்திய அரசு.
வைரஸ் தொற்று மற்றும் அதுதொடர்பான பாதிப்பு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுவதால், அனைத்து நாடுகளும் பின்பற்றத்தக்க ஒரு பொதுவான நடைமுறை மாதிரி என்று எதுவுமில்லை. ஸ்வீடனின் மக்கள்தொகை விகிதத்திற்கு, அங்கு நிகழும் மரண விகிதங்கள், அமெரிக்காவைவிட அதிகம். ஸ்வீடனின் மக்கள்தொகை நெருக்கத்திற்கு, அங்கு சமூக விலகல் கூட தேவையில்லைதான்.
இப்படியான ஒரு வித்தியாசமான எதிரியுடன் நாடு போராடிக் கொண்டிருக்கையில், அதன் பொருளாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கையில், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒரு நல்ல முடிவை எடுக்கும் முயற்சிகளும் மோடி அரசின் சார்பில் இல்லை. எதிர்க்கட்சிகளிடமும் இதற்கான சரியான தீர்வு இருப்பதாக தெரியவில்லை.
ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்து, வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு பணத்தையும் கொடுக்க வேண்டுமென்பது பெரிய செலவுமிகுந்த வேலை என்பது உண்மைதான். இதற்காக, அரசு ரூ.10 லட்சம் கோடிகள் தொகையை திரட்ட வேண்டுமென நிதி ஆயோக் பரிந்துரை செய்தது. ஆனால், இதன் விளைவாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் சிந்திக்கிறது மத்திய அரசு.
சில ஆய்வு முடிவுகளின்படி, நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 40% அளவினருக்கு மட்டும், அவர்களின் ஒரு மாத வருமானத்தை ஈடுசெய்வதற்கு மட்டும் ரூ.1.3 லட்சம் கோடிகள் தேவை என்று தெரியவந்துள்ளது.
இத்தகைய ஒரு கடும் நெருக்கடியான நிலையில், இந்தியாவின் பணக்கார கோயில்கள் நிலைமைய சரிசெய்ய முன்வரலாமே என்ற எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஏழைகளின் துயரைத் துடைப்பதில், கோயில் தங்களின் அபரிமிதமான செல்வங்களின் மூலமாக பங்கேற்கலாமே!
பல கோயில்கள், ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றன என்பது உண்மைதான். ஆனால், இத்தகைய ஒரு கடுமையான சூழலில், அவை தமது பங்களிப்பை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, தங்களின் பங்குகள் மற்றும் தங்களிடம் இருக்கும் தங்கங்களின் மூலம், ஏழைகளை வருமானத்திற்கு பல மாதங்கள் உத்தரவாதமளிக்கலாம்!
கோயில்களிடம் எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன என்பதை இங்கே விவரிப்பது சரியான ஒன்றல்ல. கோயில்கள் அவ்வாறு செய்ய வேண்டுமாய் அரசு கட்டாயப்படுத்த வேண்டுமென்ற ஆலோசனையையும் நாம் இங்கே வழங்கவில்லை. ஆனால், இது ஒரு அசாதாரணமான நேரம்! இது மோடியின் யுத்தமல்ல, நம் அனைவரின் யுத்தம்!
நன்றி: சுனில் ஜெயின்
தமிழில்: மதுரை மாயாண்டி