அவுரங்காபாத்
நேற்று அவுரங்காபாத் அருகே வெளி மாநில தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி 16 பேர் இறந்த விபத்து குறித்துப் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல கால்நடையாகக் கிளம்பி உள்ளனர் ரயில்வே தண்டவாளம் மார்க்கமாகச் சென்ற அவர்கள் தற்போது ரயில்கள் இயங்குவதில்லை என்பதால் தண்டவாளத்தில் படுத்து உறங்கி உள்ளனர். அப்போது அங்கு வந்த சரக்கு ரயில் மோதியதில் அவர்களில் 16 பேர் உயிர் இழந்து நால்வர் காயம் அடைந்தனர்..
இது குறித்து ரயில்வே நிர்வாகம், “தண்டவாளத்தில் தொழிலாளர்கள் இருப்பதைக் கண்ட எஞ்சின் ஓட்டுநர் ஹாரன் அடித்து எச்சரிக்கை செய்துள்ளார். அத்துடன் அவர் ரயிலை நிறுத்த அனைத்து முயற்சிகளும் எடுத்தார். ஆயினும் இந்த விபத்து நேர்ந்து மரணம் நிகழ்ந்தது எனத் தனது அறிவிப்பில் தெரிவித்தது.
தற்போது வெளியான தகவலின்படி இவர்கள் அனைவரும் கடந்த ஒருவாரம் முன்பிருந்தே ஊருக்குத் திரும்ப பாஸ் கேட்டு விண்ணப்பித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இந்த பணிக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளைப் பலமுறை தொலைப்பேசி மூலம் அழைத்துள்ளனர்
ஆனால் யாரும் தொலைப்பேசியை எடுக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதனால் வெறுப்படைந்த அவர்கள் கால்நடையாகவே சொந்த ஊருக்குக் கிளம்பி வழியில் நிகழ்ந்த விபத்தால் உயிர் இழந்துள்ளனர். அதிகாரிகள் குறைந்தது ஒரே ஒரு முறையாவது தொலைப்பேசி அழைப்பை ஏற்றிருந்தால் 16 உயிர்கள் காக்கப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வேண்டுகோளை ம பி அரசு பதிவு செய்துள்ளதா? அப்படி என்றால் அவர்களை அழைத்து வர என்ன முயற்சிகள் செய்யப்பட்டன? இதற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதிலளிக்கவில்லை எனில் அவமானத்தை சந்திக்க நேரிடும். அவர் ஊடகங்களிடம் எதையாவது சொல்கிறாரே தவிர என்ன செய்கிறார்?” எனச் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.