மும்பை
உச்சநீதிமன்றத்தில் 33% நீதிபதிகளும் உயர்நீதிமன்றத்தில் 50% நீதிபதிகளும் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகள் என ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் கொலிஜியம் மூலம் நியமிக்கப்படுகின்றனர். கொலிஜியம் பரிந்துரைப்படி மத்திய அமைச்சகம் நீதிபதிகளை நியமனம் செய்கிறது. நீதிபதி காலியிடங்கள் குறித்து எவ்வித அறிவிப்போ விளம்பரமோ வெளிவருவதில்லை. கொலிஜியம் பரிந்துரை என்பது ரகசியமாக நடைபெறுகிறது. இந்த பரிந்துரையில் திறமைகளை சட்டை செய்வதில்லை என உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் குற்றம் சாட்டி இருந்தார்.
மும்பையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் மாத்யூஸ் ஜே நெடும்பரா என்பவர் தேசிய நீதித்துறை பணி நியமன ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அவர் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளார். இந்த கணக்கெடுப்பின் முடிவுகளை அவர் ஒரு அறிக்கையாக உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு அளித்தார்.
அந்த அறிக்கையில், “கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் அடங்கிய குழு மற்ற நீதிபதிகளைப் பணி நியமனம் செய்கிறது. கொலிஜிய உறுப்பினர்கள் சிபாரிசு செய்வோர் பெரும்பாலும் ஏற்கனவே நீதிபதிகளாகப் பணி புரிந்தோரின் மகன் அல்லது மகன் முறை உறவில் அதாவது சகோதரர் அல்லது சகோதரி மக்களாக உள்ளனர். இதற்குக் காரணம் நீதிபதிகள் மற்ற மூத்த நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், ஆளுநர்கள், முதல்வர்கள், சட்ட அமைச்சர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மற்றும் அதிகார வர்க்கத்தினர் ஆகியோருக்கு சலுகை அளிப்பதாகும்.
தற்போது உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் நியமனம் செய்யபட்டன்ர். இவர்களில் 6 பேர் முன்னாள் நீதிபதிகளின் மகன்கள் ஆவார்கள். இதைப் போல் உயர்நீதிமன்றங்களில் நியமனம் செய்யப்பட்ட 88 நீதிபதிகளில் 13 பேருடைய குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர், அல்லது நீதிபதியாக உள்ளனர். இவை அனைத்தும் உச்சநீதிமன்ற இணைய தளத் தகவலில் இருந்து எடுக்கபட்டுளது. ஒரு சில உயர்நீதிமன்ற விவரங்கள் முழுமையாக இல்லாததால் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : பாத்லீகல்.இன்