டெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய 3 மாநிலங்கள் வரவிருக்கும் நாட்களில் கொரோனா வைரசால் அதிக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த வாரம் முதல் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு அதிகளவு திரும்பி வருவதால் நோயின் எழுச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் 3 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முக்கிய ஆலோசனை நடத்தினார். புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டார்.
ஒடிசாவில் புதியதாக 20 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டன. பாதிக்கப்பட்ட நபர்கள் குஜராத்தில் சூரத்திலிருந்து திரும்பி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். நோயாளிகளில் 3 பேர் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மற்றும் 17 கஞ்சம் மாவட்டங்களில் கண்டறியப்பட்டனர்.
ஒடிசாவில் இதுவரை 185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 65 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் மட்டுமே பலியாகி இருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் 1,456 பேருக்கு கொரோனா உள்ளது. அவர்களில் 364 பேர் குணம் பெற்றுள்ளனர். 144 பேர் இறந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் இதுவரை 2,998 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 60 பேர் மரணிக்க 1,130 பேர் அந்த நோயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.